வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி முடுக்குப்பட்டி மக்கள் போராட்டம்
வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி முடுக்குப்பட்டி மக்கள் போராட்டம் நடத்தினர்.
திருச்சி முடுக்குப்பட்டியில் 151 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் அவர்கள் குடியிருப்பதாகவும், வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறும் கூறி கடந்த 5-ந் தேதி ரெயில்வே ஊழியர்கள் நோட்டீஸ் ஓட்டினர். இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ரெயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.
இது குறித்து மக்கள் முன்னேற்ற பொது நலச்சங்க நிர்வாகிகள் கூறும்போது, பல ஆண்டுகளாக இந்த இடத்தில் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு தமிழக அரசு சார்பில் சாலை வசதி, மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது. திடீரென வீடுகளை காலி செய்யுமாறு ரெயில்வே தரப்பில் கூறி வருகிறார்கள். ஆகவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு இந்த இடத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் வகையில் பட்டா வழங்க வேண்டும் என்று கூறினர்.