மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு பயந்து தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் -எடப்பாடி பழனிசாமி பேட்டி


மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு பயந்து தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் -எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டுக்கு பயந்து உண்ணாவிரத போராட்டத்தை தி.மு.க. அறிவித்து இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரையில் வருகிற 20-ந் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வியக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறும். மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள்.

இந்த மாநாட்டை கண்டு பயந்து நடுங்கிப்போய், என்ன செய்வது என்று தெரியாமல் நீட் தேர்வை மையமாக வைத்து உதயநிதி ஸ்டாலின் அங்கு உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கிறார். இது வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்படுகிறது.

நீட் தேர்வு

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இப்போது 2 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. 3-வது ஆண்டு நடக்கிறது. இவ்வளவு நாட்கள் என்ன முயற்சி எடுத்தார்கள்?

ஆனால் அ.தி.மு.க. நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து முயற்சிகளும் எடுத்தது. அதே முயற்சியை தான் தி.மு.க.வும் எடுத்து வருகிறது. ''இந்தியா'' கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்தாவது தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய, ஆதரவை கேட்டு அந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.10 ஆண்டுகள் ஆனாலும் இவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. அ.தி.மு.க., மருத்துவ படிப்பு சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததால் தான் இந்த ஆண்டு 606 பேர் தேர்வாகி இருக்கின்றனர்.

காவிரி பிரச்சினை

''இந்தியா'' கூட்டணியில் அங்கம் வகிப்பதற்காக பெங்களூரு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை பற்றியும், விவசாயத்தை பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார்.

மாநிலத்தில் பிரச்சினை என்று வந்தபோது எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினால் தான் கூட்டணியில் அங்கம் வகிப்பேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னார். அதேபோல காவிரி தீர்ப்புப்படி தண்ணீரை முழுமையாக திறந்து விட்டால்தான் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று மு.க.ஸ்டாலின் சொல்லவில்லை. மதுரை மாநாட்டுக்கு தடை கேட்டு வழக்கு தொடுப்பதற்கு என நிறைய பேர் இருக்கிறார்கள். அதெல்லலாம் ஒன்றும் செய்ய முடியாது. ஏற்கனவே காவல்துறையிடம் அனுமதி வாங்கி இருக்கிறோம். தி.மு.க.வின் 27 மாத கால ஆட்சியில் ரூ.2 லட்சத்து 73 ஆயிரம் கோடி கடன் வாங்கியதுதான் மிச்சம். கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழ்நாடு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story