'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணி 5 மாதத்தில் தொடங்கும்'-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் 5 மாதங்களில் தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கொட்டாம்பட்டி,
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் 5 மாதங்களில் தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி
தமிழகம் முழுவதும் 31-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாைம சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் கலெக்டர் அனிஷ்சேகர், சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், பொது சுகாதார இயக்குனர் செல்வவிநாயகம், துணை இயக்குனர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சண்முகப்பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், மருத்துவ குழுவினர், வருவாய் துறையினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பரிசு
அதன் பின்னர் மேலூர் கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த கொட்டாம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அர்ச்சனா, ஸ்வேதா ஆகியோருக்கு அமைச்சர்கள் பரிசு வழங்கி பாராட்டினர்.
அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தை பொறுத்தவரை 94.68 சதவீதம் பேர் முதல் தடவை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.2-ம் தவணை தடுப்பூசியை 85.47 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். மதுரையை பொறுத்தவரையில் 18 வயது தாண்டியவர்கள் 83.06 சதவீதமும், இரண்டாவது தவணையாக 70.06 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி 40 சதவீதம் அளவில் இருப்பு உள்ளது. மதுரையில் 65 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மதுரையில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 910 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன.
தமிழகத்தில் 25 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என 50 சுகாதார நிலையங்களும் புதிதாக அமைக்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
5 மாதங்களில்..
எய்ம்ஸ் மருத்துவமனை ெதாடங்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக எந்த பணிகளும் நடைபெறவில்லை. மருத்துவமனை கட்டமைப்பு டிசைன் விரைவில் வெளியிடப்பட உள்ளது. 2 மாதங்களில் டெண்டர் தொடங்கி இன்னும் 5 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.
கொரோனா பாதிப்பால் கடந்த 4 மாதங்களில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இணைநோயால் ஒருவரும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஒருவர் என 2 பேர் மட்டுமே இறந்துள்ளனர். சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மருத்துவர் உள்ளிட்ட 4,308 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும். கடந்த ஆட்சியில் ஊழல் செய்த 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.