மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் இடமாற்றம்


மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் இடமாற்றம்
x

மதுரை மாநகராட்சி கமிஷனராக இருந்த கார்த்திகேயன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கமிஷனராக சிம்ரன்ஜித்சிங் காலொன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை

மதுரை,

மதுரை மாநகராட்சி கமிஷனராக இருந்த கார்த்திகேயன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கமிஷனராக சிம்ரன்ஜித்சிங் காலொன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடிப்படை பணிகள்

மதுரை மாநகராட்சி கமிஷனராக இருந்த டாக்டர் கே.பி.கார்த்திகேயன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு (2021) ஜூன் மாதம் 14-ந் தேதி மாநகராட்சியின் 69-வது கமிஷனராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்கும் போது மாநகராட்சியில் நிதி தட்டுப்பாடு, நிர்வாக சீர்கேடு இருந்தது. அதே போல் மாநகராட்சி திட்டப்பணிகளை செயல்படுத்துவதில் பெரிய அளவில் சுணக்கம் இருந்தது. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மிக மந்த நிலையில் நடந்தன. அதோடு இந்த திட்டப்பணிகள் குறித்து பல்வேறு முறைகேடுகள், குறைகள் இருந்தன. கார்த்திகேயன் பொறுப்பேற்றவுடன் குடிநீர், பாதாள சாக்கடை, தெரு விளக்கு உள்பட அடிப்படை பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தினார். அதனால் நகரில் குடிநீர் வினியோகம் சீரானது. கார்த்திகேயன், டாக்டர் என்பதால் மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் மேம்பாட்டு பணிகளில் அதிக ஆர்வம் செலுத்தினார். அதனால் மாநகராட்சி ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பெரியார் பஸ் நிலையத்தில் வணிக வளாகத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தன.அங்கு பயணிகளுக்கான வசதிகள் குறைவாக இருந்தன. ஆனால் கார்த்திகேயன், மக்களுக்கான வசதிகளை அதிகப்படுத்தினார். அவரது நடவடிக்கையால் தான் பெரியார் பஸ் நிலையம் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றன. அதே போல் அடுக்குமாடி வாகன காப்பகம், மீனாட்சி அம்மன் கோவில் அருகே மேம்பாடு ஆகிய பணிகளுக்கு புத்துயிர் கொடுத்தார். அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.

இணையதளம்

மதுரை மாநகராட்சியில் வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டு வர கார்த்திகேயன், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ஓய்வூதிய பணப்பயன்களை வழங்கினார். மாநகராட்சி ஊழியர்களிடம் கண்டிப்புடன் வேலை வாங்கினார். ஊழியர்களை அடிக்கடி இடமாற்றம் செய்வார் என்ற பெயர் இவருக்கு உண்டு. கார்த்திகேயன், தனது ஆய்வின் போது குறைகளை கண்டறிந்தால், உடனடியாக அதனை சரி செய்து வாட்ஸ்-அப்பில் புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்ப உத்தரவிடுவார்.

மாநகராட்சி வருவாயை பெருக்க நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வரி மற்றும் வாடகைகளை வசூலித்தார். கடை ஏலங்கள் மற்றும் டெண்டர் விவரங்களை மாநகராட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட்டார். மாநகராட்சி இனங்களுக்கு ஏலம் விடும் போது, டெபாசிட் தொகை மற்றும் வாடகையை கூடுதலாக நிர்ணயித்தார். மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியர்களை நியமித்து, அவர்களுக்கு சம்பளம் வழங்குவதில் மிகப்பெரும் மோசடிகள் நடைப்பெற்று வந்தன. அதற்கு கார்த்திகேயன் முற்றுப்புள்ளி வைத்தார். பணிக்கு தகுதி இல்லாத ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்தார்.

புதிய கமிஷனர் நியமனம்

மதுரை மாநகராட்சி இணையதளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றபடி புதுப்பித்தார். தற்போது கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சியின் புதிய கமிஷனராக சென்னை மாநகராட்சியின் தெற்கு வட்டார துணை கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் காலொன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.


Related Tags :
Next Story