மதுரை கோட்ட வர்த்தக பிரிவு அதிகாரிகள் பணியிட மாற்றம்
மதுரை கோட்ட வர்த்தக பிரிவு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மதுரை கோட்ட ரெயில்வேயின் முதுநிலை வர்த்தக மேலாளராக இருப்பவர் ஆர்.பி.ரதிப்பிரியா. இவர் திருச்சி கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தென்னக ரெயில்வே துணைத்தலைமை இயக்க மேலாளராக (ரெயில் பெட்டிகள் பிரிவு-2) இருந்த டி.எல்.கணேஷ் அவரது சொந்த விருப்பத்தின் பேரில் மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, தென்னக ரெயில்வே துணைத்தலைமை இயக்க மேலாளராக (ரெயில் பெட்டிகள் பிரிவு-1) பணியாற்றி வரும் ஆர்.ஹரிகிருஷ்ணன் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, திருச்சியில் உள்ள ரெயில்வே மண்டல பயிற்சிப்பள்ளியில் பணியாற்றி வந்த பி.மணிவண்ணன் பதவி உயர்வில் மதுரை கோட்ட ரெயில்வே உதவி வர்த்தக மேலாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதில், முதுநிலை வர்த்தக மேலாளராக பொறுப்பேற்க உள்ள கணேஷ் ஏற்கனவே மதுரை கோட்டத்தில் உதவி இயக்க மேலாளர், கோட்ட இயக்க மேலாளர், கோட்ட வர்த்தக மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.