மதுரை குப்பை நகரமாகிவிட்டது-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு


மதுரை குப்பை நகரமாகிவிட்டது-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
x

மாநகராட்சியில் எந்த பணியும் நடப்பதில்லை. மதுரை குப்பை நகரமாக மாறிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.

மதுரை

மாநகராட்சியில் எந்த பணியும் நடப்பதில்லை. மதுரை குப்பை நகரமாக மாறிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.

கோரிக்கை மனு

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமாரை சந்தித்து மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகி விட்டது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகி விட்டன. ஆனால் ஒரு புதிய திட்டப்பணியையும் மதுரையில் தொடங்கவில்லை. எங்கள் ஆட்சி காலத்தில் மதுரையில் மட்டும் சுமார் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பணிகள் நடந்தன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய பணிகளை மட்டுமே தற்போது தி.மு.க. தொடங்கி வைத்து வருகிறது. அதிலும் சில பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.

குறிப்பாக பெரியார் பஸ் நிலைய வணிக பணிகள், முல்லை பெரியாறு குடிநீர் திட்ட பணிகள் மந்த நிலையில் நடக்கின்றன.

அ.தி.மு.க. ஆட்சியின் போது மாநகராட்சியின் வரி வருமானம் குறைவாக இருந்தது. இருந்தாலும் மாநகராட்சி வளர்ச்சி பணிகள் துரிதமாக நடந்தது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் வரியை உயர்த்திவிட்டனர். எனவே மாநகராட்சி வருமானமும் அதிகரித்து விட்டது. ஆனால் மக்கள் பணிகள் எதுவும் நடப்பதில்லை. குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. பல இடங்களில் குடிநீர் மக்களுக்கு கிடைப்பதில்லை. சாலைகளில் கழிவு நீர் ஆறாக ஓடுகிறது. தெரு விளக்குகள் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு எரிந்தது போல மிகவும் மங்கலாக எரிகிறது.

தெப்பக்குளம் கழிவுநீர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தூய்மை பணிக்காக மதுரை மாநகராட்சி 3 விருதுகள் பெற்று உள்ளது. தற்போது மதுரை மாநகரம் குப்பை நகரமாக மாறி விட்டது. ஒரு பகுதியில் 20 பேர் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்றால் 4 பேர் தான் இருக்கிறார்கள். ஒப்பந்த துப்புரவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் மோசடி நடக்கிறது. ஆட்கள் பற்றாக்குறையால் மாநகராட்சியின் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பூங்காக்கள் பராமரிப்பின்றி கிடக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் தெப்பக்குளத்தில் முழுமையாக தண்ணீர் தேக்கினோம். ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்தது. ஆனால் இப்போது பாதி தண்ணீர் தான் இருக்கிறது. அதிலும் கழிவுநீர் கலந்து விட்டது.

மாநகராட்சியில் 15 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் மாநகராட்சி அலுவலகத்தில் அறை ஒதுக்கவில்லை. பல முறை கேட்டு பார்த்தும் பலனில்லை. மேயர் செயல்படாத மேயராக இருக்கிறார். அவரது பேச்சுகளை இங்கு யாரும் கேட்பதில்லை. மாநகராட்சியின் செயல்பாடுகளால் விரக்தி அடைந்த தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பூமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார். இதுவே மாநகராட்சியின் செயல்பாடுகளுக்கு சாட்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா உள்பட அ.தி.மு.க.வினர் பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story