பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க தாமதித்ததால் உள்துறை செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க தாமதித்ததால் உள்துறை செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்  மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 Sep 2023 8:45 PM GMT (Updated: 22 Sep 2023 8:45 PM GMT)

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க தாமதித்ததால் உள்துறை செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நாங்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.

கடந்த 2020-ம் ஆண்டு எங்களது பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி என்பவர், எனது மகளான 7 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது முடிவில் வேலுச்சாமிக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த ஒரு லட்ச ரூபாயை ஒரு மாதத்திற்குள் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் உள்துறை செயலாளருக்கு நாங்கள் மனு அனுப்பினோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. வறுமையில் வாடும் எங்கள் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையை ஓராண்டுக்கும் மேலாக வழங்காமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. மனுதாரர் குடும்பத்தினருக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகையை அதிகாரிகள் வழங்க வேண்டும். கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாமல் தாமதித்த உள்துறை செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையையும் இழப்பீட்டுத் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Next Story