இந்து மக்கள் கட்சியின் மாநாடு நடத்த நிபந்தனையுடன் மதுரை ஐகோர்ட்டு அனுமதி
இந்து மக்கள் கட்சியின் மாநாடு நடத்த நிபந்தனையுடன் மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்தது
தூத்துக்குடியை சேர்ந்தவரும், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளருமான வசந்தகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு வருகிற 1, 2-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடத்த முடிவு செய்து உள்ளோம். இந்த மாநாட்டில் பேரணி, கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டமும் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் ஆதீனங்கள், சன்னியாசிகள் மற்றும் ஆன்மிக சான்றோர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கருத்தரங்கம், மாநாடு தனியார் மகாலில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் மனு அளித்தோம். எந்த பதிலும் இல்லை. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அப்போது போலீசார் தாக்கல் செய்த பதில் மனுவில், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விதிகளை பின்பற்றி 2 நாள் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, உள் அரங்கில் கருத்தரங்கம் மற்றும் மாநாட்டை மனுதாரர் தரப்பினர் நடத்த உள்ளனர். எனவே, இதில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது என மனுதாரர் தரப்பில் பிரமாணப்பத்திரத்தை போலீசாரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி நிகழ்ச்சிகளை நடத்தக்கோரும் மனுவை போலீசார் பரிசீலித்து உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.