பாலியல் வன்முறையால் கருவுறுகிறார்கள் சிறுமிகள் மாயமாகும் விவகாரங்களை இரும்பு கரத்துடன் கையாள வேண்டும் -போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்


பாலியல் வன்முறையால் கருவுறுகிறார்கள் சிறுமிகள் மாயமாகும் விவகாரங்களை  இரும்பு கரத்துடன் கையாள வேண்டும் -போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
x

சிறுமிகள் மாயமாகும் விவகாரங்கள் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவை என்பதால் அவற்றை இரும்புக்கரங்களுடன் கையாள வேண்டும் என்று போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

மதுரை


சிறுமிகள் மாயமாகும் விவகாரங்கள் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவை என்பதால் அவற்றை இரும்புக்கரங்களுடன் கையாள வேண்டும் என்று போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

ஆட்கொணர்வு மனு

மதுரை ஐகோர்ட்டில், ரவிச்சந்திரன் என்பவர், தன்னுடைய மகள் காணாமல் போய்விட்டார். அவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் காணாமல் போனதாகவும், அவர்களை மீட்டு ஒப்படைக்கும்படியும் பல்வேறு ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

இந்த வழக்குகளை விசாரிக்கும்போது, வாலிபர்களால் காதலிக்கப்படும் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். அவர்களை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். பல வழக்குகளில் மருத்துவ பரிசோதனை செய்தால், அவர்கள் கருவுற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

சமூகத்துக்கு அச்சுறுத்தல்

இத்தகைய நிகழ்வுகள் இந்த சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவை. இவற்றை இரும்புக் கரங்களுடன் கையாள வேண்டும். இதுபோன்ற புகார்களை கட்டுப்படுத்த நிரந்தர அமைப்புகளை தமிழக போலீசார் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க "மனித மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு" அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.

விரைவாக விசாரிக்க அறிவுரை

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விசாரணை பிரிவில் ஒரு வருடத்திற்கு எத்தனை வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. விசாரணை முடிந்தபின், இந்த அமைப்பு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உரிமை உள்ளதா? என்பது குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இதுபோன்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். பின்னர் இந்த வழக்கை வருகிற ஜூன் மாதம் 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story