ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி நியமனங்களை ரத்து செய்யக்கோரி வழக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர்  பணி நியமனங்களை ரத்து செய்யக்கோரி வழக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 March 2023 7:00 PM GMT (Updated: 3 March 2023 7:44 PM GMT)

ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி நியமனங்களை ரத்து செய்யக்கோரி வழக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்த நித்யா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

கடந்த 9.9.2022 அன்று குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணி நியமனம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பின்படி நான் அந்த பணிக்கு விண்ணப்பித்து இருந்தேன். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி நேர்முகத் தேர்வுக்காக அழைத்திருந்தனர்.

அந்த தேர்வுக்கு சென்றபோது, என்னுடைய கல்வி சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். என்னை போலவே அங்கு வந்த பலரிடமும் நேர்முகத் தேர்வை நடத்தாமல் சான்றிதழ்களை மட்டும் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் சம்பந்தமே இல்லாத சிலரை அலுவலக உதவியாளர் பணிக்கு நியமித்து உத்தரவிட்டு உள்ளனர். நேர்முகத் தேர்வே நடத்தாமல் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி நியமனம் அளித்தது ஏற்புடையதல்ல.

எனவே அந்தப் பணி நியமனங்களை ரத்து செய்து விட்டு, நேர்முக தேர்வு நடத்தி விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிதாக பணி நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் சுந்தர், ஆஜராகி, விண்ணப்பித்தவர்களுக்கு உரிய முறையில் தேர்வு நடத்தாமல் முறைகேடாக பணி நியமனம் அளித்திருப்பது சட்டவிரோதம். அந்த பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், மனுதாரரின் புகார் மனுவை பரிசீலித்து ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.


Next Story