விசாரணை கைதி இறந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக வேண்டும்


விசாரணை கைதி இறந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக வேண்டும்
x

விசாரணை கைதி இறந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

விசாரணை கைதி இறந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கைதி சாவு

மதுரையை சேர்ந்த முருகேஸ்வரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனது கணவர் இசக்கியை ஒரு கொலை வழக்கு தொடர்பாக மதுரை அண்ணாநகர் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவரை 8 போலீசார் அடித்து துன்புறுத்தியதில் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.

பின்னர் அவரை திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். அங்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டதால் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். என் கணவர் இறப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அட்வகேட் ஜெனரல்

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இசக்கி குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது என தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பல ஆண்டுகளாக இந்த வழக்கில் அரசு தரப்பில் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் இந்த வழக்கை முன்னோக்கி எடுத்துச்செல்ல முடியவில்லை. சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுத்ததாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. என்ன நடவடிக்கை எடுத்தது? என்பது குறித்து தெளிவான பதில் இல்லை.

எனவே இந்த வழக்கில் அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜரானால் சரியாக இருக்கும் என நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 31-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Next Story