ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புக்கு டெண்டர் நடத்த தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புக்கு டெண்டர் நடத்த தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Sep 2023 7:30 PM GMT (Updated: 8 Sep 2023 7:30 PM GMT)

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புக்கு டெண்டர் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை


விருதுநகர் மாவட்டம் திருச்சுழி முதல்நிலை பேரூராட்சி தலைவர் பஞ்சவர்ணம்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருச்சுழி முதல் நிலை பேரூராட்சியில் பல்வேறு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக குடிநீர் இணைப்புகள் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த 2022-23-ம் ஆண்டில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் திருச்சுழி பேரூராட்சியில் குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்காக சுமார் ரூ.146 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நிதியின் கீழ் பேரூராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

ஆனால் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு டெண்டர் அறிவித்து காண்டிராக்ட் வழங்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். பஞ்சாயத்து ராஜ் விதிகளின்படி உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகளின் கீழ் பேரூராட்சி, ஊராட்சிகளில் சாலை, சாக்கடை, குடிநீர் போன்ற வசதிகளை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகமே செய்து கொள்ளலாம். ஆனால் சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உள்ளாட்சி நிர்வாகத்தின் அதிகாரத்தில் தேவையின்றி தலையிட்டு டெண்டர் முறையில்தான் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்துவது சட்டவிரோதம்.

எனவே திருச்சுழி பேரூராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு டெண்டர் முறையை பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, உள்ளாட்சி நிர்வாகத்திற்கான அதிகாரங்களை எடுத்து கூறி வாதாடினார்.

விசாரணை முடிவில், குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு டெண்டர் முறையை பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.


Next Story