நரிக்குறவர் என்ற பெயரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் நீக்கக்கோரி வழக்கு- மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
நரிக்குறவர் என்ற பெயரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் நீக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
நரிக்குறவர் என்ற பெயரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் நீக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
குறவர் இன குடிகள்
மதுரை விளாங்குடியைச் சேர்ந்த இரணியன் என்ற முத்துமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் குறவர் இனத்தை சேர்ந்தவன். 1950-ம் ஆண்டில் குறவன் இனத்தை எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் சேர்த்தனர். குறவன் அல்லது கொறவன் மற்றும் குறவர் அல்லது கொறவர் என்ற அனைத்து பெயர்களும் குறவன் இனத்தை குறிக்கும் என சட்டத்தில் கூறப்படுகிறது. குறவன் சமூகத்தினர் தமிழையும், குறிஞ்சி நிலத்தையும் பூர்வீகமாக கொண்டு மலைப்பகுதியில் வசித்தவர்கள். தற்போது மலையில் இருந்து சமதள பரப்பிற்கும் வந்துள்ளனர்.
இதற்கிடையே நரிக்குறவர்கள் இனத்தை கடந்த 1951-ம் ஆண்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர். நரிக்குறவர்கள் ஆந்திரா மற்றும் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.
நரிக்காரர்களால் இடையூறு
ஆந்திராவில் இவர்களை குருவிக்காரர்கள், நரிக்காரர் என்றும் குஜராத்தில் வாக்கிரிவலா, நக்கலே என்றுதான் அழைக்கிறார்கள். குறவர்களின் பழக்கவழக்கமும், நரிக்குறவர்களின் சமயம், பழக்கவழக்கம், திருமண முறைகளிலும் வேறுபாடு உள்ளது.
அவர்களையும், எங்களையும் ஒரே இனமாக கருதுவதால், கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் நரிக்குறவர் என்ற பெயரில் குறவர் என்பதை நீக்கிவிட்டு நரிக்காரர், குருவிக்காரர், வாக்கிரிவலா, நக்கலே போன்ற பெயர்களில் அழைக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
அரசுகளுக்கு உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் திருமுருகன் ஆஜராகி, குற்றலா குறவஞ்சி போன்ற சங்க இலக்கியங்களில் குறவர் இனம் பற்றிய தகவல்கள் இடம்பெற்று உள்ளன. ஆனால் அவர்களுக்கும் நரிக்காரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களை நரிக்குறவர் என அழைக்கக்கூடாது என்பது மனுதாரரின் கோரிக்கை. அதை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், மனுதாரர் வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.