நதிகள் தூய்மைப்படுத்தும் சிறப்பு திட்டத்தின்கீழ் காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளை பராமரிக்க நிதி ஒதுக்கக்கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நதிகள் தூய்மைப்படுத்தும் சிறப்பு திட்டத்தின்கீழ் காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளை பராமரிக்க நிதி ஒதுக்கக்கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

நதிகளை தூய்மைப்படுத்தும் சிறப்பு திட்டத்தின்கீழ் காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளை தூய்மைப்படுத்தி பராமரிக்க நிதி ஒதுக்கும்படி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


நதிகளை தூய்மைப்படுத்தும் சிறப்பு திட்டத்தின்கீழ் காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளை தூய்மைப்படுத்தி பராமரிக்க நிதி ஒதுக்கும்படி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நதிகள் தூய்மைத்திட்டம்

மதுரை மாவட்டம் பொதும்பு அதலையைச் சேர்ந்த புஷ்பவனம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழ்நாட்டிற்கும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசிக்கும் உள்ள பழமையான தொடர்பை பலப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் தலைப்பில் கலாசார நிகழ்ச்சியை கடந்த நவம்பர் மாதம் வாரணாசியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்காக நமாமி கங்கை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. அதுமட்டும் அல்லாமல் நாடு முழுவதும் உள்ள நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இதுவரை 408 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதில் 228 திட்டங்கள் முடிக்கப்பட்டு உள்ளன. 132 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. கங்கை தூய்மை திட்டத்தில் 9 மாநிலங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டு வரை ரூ.9,895.16 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

தமிழக ஆறுகள் பராமரிக்கப்படவில்லை

இந்தியாவின் ஜி.எஸ்.டி., ஜி.டி.பி.யில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் ஜி.எஸ்.டி., ஜி.டி.பி.யில் தமிழகத்தை விட குறைந்த அளவு பங்களிப்பை வழங்கும் பல்வேறு மாநிலங்களில் உள்ள நதிகளை தூய்மைப்படுத்துவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் வைகை, காவிரி, தாமிரபரணி ஆகியவை முக்கிய நதிகள் ஆகும். இந்த 3 நதிகளை பாதுகாக்க ஐகோர்ட்டுகள் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து உள்ளன. ஆனால் போதுமான நிதி இல்லாமல் இந்த 3 நதிகளும் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை.

எனவே வைகை, காவிரி, தாமிரபரணி ஆகிய 3 நதிகளை, தேசிய கங்கை தூய்மைத்திட்டத்தின் கீழ் பராமரிப்பதற்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும். அல்லது வைகை உள்பட 3 நதிகளை தூய்மைப்படுத்த சிறப்பு திட்டத்தை அமல்படுத்தும்படி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.


Next Story