சிறுவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை வழக்கு: கடைக்காரர் உள்ளிட்ட 3 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை சரிதான் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சிறுவர்களுக்கு போதைப்பொருட்களை விற்றதற்காக கடைக்காரர் உள்ளிட்ட 3 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை சரிதான் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிறுவர்களுக்கு போதைப்பொருட்களை விற்றதற்காக கடைக்காரர் உள்ளிட்ட 3 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை சரிதான் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிறுவர்களுக்கு விற்பனை
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் உச்சிமாகாளி. இவருக்கு சொந்தமான கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்ததாக புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் அங்கு சோதனையிட்டு குட்கா, வெளிநாட்டு பீர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
சிறுவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக உச்சிமாகாளி மற்றும் அவரது கடையில் வேலை செய்த மணிகண்டன், சுடலைமணி ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் அவர்களை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர்கள் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்யும்படி 3 பேரின் மனைவிகளும் தனித்தனியாக மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அரசின் நடவடிக்கை சரிதான்
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்களின் வக்கீல்கள் ஆஜராகி, 3 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தது தவறு என வாதிட்டனர்.
பின்னர் ஆஜரான அரசு வக்கீல் திருவடிகுமார், இந்த விவகாரத்தில் கைதான 3 பேரும் சிறுவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவேதான் தமிழக அரசின் சிறப்பு சட்டத்தின்படி அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது, என்றார்.
விசாரணை முடிவில், சிறுவர்களுக்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை 3 பேரும் விற்றதால், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது சரிதான். அதே நேரத்தில் குண்டர் சட்ட நடவடிக்கை குறித்த தகவல்களை உரிய நேரத்தில் அவர்களுக்கு போலீசார் வழங்கவில்லை. எனவே அவர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது, என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.