ஆபாச வீடியோ எடுத்து சிறுமிகளை மிரட்டிய வழக்கு: நாகர்கோவில் காசி ஜாமீன் கேட்ட மனுவுக்கு பதில் அளியுங்கள்- போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஆபாச வீடியோ எடுத்து சிறுமிகளை மிரட்டிய வழக்கு: நாகர்கோவில் காசி ஜாமீன் கேட்ட மனுவுக்கு பதில் அளியுங்கள்- போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

ஆபாச வீடியோ எடுத்து சிறுமிகளை மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் காசி ஜாமீன் கேட்ட மனுவுக்கு பதில் அளியுங்கள் என்று போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் தங்கப்பாண்டியன். இவரது மகன் சுஜி என்ற காசி. இவர் பல்வேறு சிறுமிகளை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2020-ம் ஆண்டு புகார்கள் வந்தன. இந்த புகார் குறித்து கன்னியாகுமரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து காசி மற்றும் அவரது தந்தை தங்கப்பாண்டியனை கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே காசி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. பின்னர் அவரது தந்தை தங்கப்பாண்டியனுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்தது.

காசியின் ஜாமீன் மனுவை ஏற்கனவே ஐகோர்ட்டு விசாரித்தபோது, அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என போலீசார் ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது, காசியின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை சோதனை செய்தபோது, ஆபாசமான 1,900 புகைப்படங்களும், 400 வீடியோக்களும் இருந்தன. 120 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆபாச வீடியோக்களை காண்பித்து சம்பந்தப்பட்ட சிறுமிகளை திரும்பத்திரும்ப பாலியல் வன்கொடுமையில் காசி ஈடுபடுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர்தான் புகார் தெரிவித்துள்ளனர். பிரதான வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் வகையில் காசி, மீண்டும் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்து வருகிறார் என்று போலீசார் தெரிவித்து இருந்தனர். அதன்பேரில் ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியாகின. இந்தநிலையில் காசி மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இதுகுறித்து பதில் அளிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story