ஓடும் பஸ்சில் இருந்து குதித்து பெண் இறந்த வழக்கு: ஊராட்சி கிளர்க் முன்ஜாமீன் கேட்ட மனு தள்ளுபடி-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஓடும் பஸ்சில் இருந்து குதித்து பெண் இறந்த வழக்கில் ஊராட்சி கிளர்க் முன்ஜாமீன் கேட்ட மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் நாகலட்சுமி. இவருக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். நாகலட்சுமி மையிட்டான்பட்டி கிராமத்தில் நூறு நாள் வேலை பணித்தள பொறுப்பாளராக பணியாற்றினார். கலெக்டர் உத்தரவுப்படி நேரடியாக நாகலட்சுமி பணியில் சேர்ந்ததால் அவரிடம் மையிட்டான்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் பாலமுருகன், உறுப்பினர் வீரக்குமார், கிளர்க் முத்து இருளாண்டி ஆகியோர் அடிக்கடி பிரச்சினை செய்து வந்தனர்.
இதனால் அவர்கள் மீது மதுரை மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு அரசு பஸ்சில் சென்றார். அப்போது ஓடும் பஸ்சில் இருந்து அவர் மட்டும் திடீரென குதித்தார். இதில் படுகாயம் அடைந்த நாகலட்சுமி, பரிதாபமாக இறந்தார்.
இவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு மேற்கண்ட 3 பேர் தான் காரணம் என கூறியிருந்தார். இதன்படி அந்த 3 பேர் மீது கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 3 பேரும் தலைமறைவாக உள்ளனர்.
அவர்களில் ஊராட்சி துணைத் தலைவர் பாலமுருகன் (வயது 46), உறுப்பினர் வீரக்குமார் (33) ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு செய்தனர். அந்த மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி ஆனது.
இந்த நிலையில் ஊராட்சி கிளர்க் முத்து இருளாண்டி தனக்கு முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவையும் நீதிபதி இளந்திரையன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.