பொய்யாக விபசார வழக்கில் கைதான பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பொய்யாக விபசார வழக்கில் கைதான பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு- தமிழக அரசுக்கு  மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

பொய்யாக விபசார வழக்கில் கைதான பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் கிராமத்தில் உள்ள பழமையான வீட்டை பராமரிக்க முடிவு செய்தோம் இதற்காக போலீஸ்காரர் ராஜ்குமார் என்பவரின் வீட்டில் வாடகைக்கு இருந்தோம். இதற்காக அவருக்கு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்திருந்தோம். பணத்தை பெற்றுக்கொண்ட அவர், வீட்டை ஒப்படைப்பதில் தாமதம் செய்தார்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் நாங்கள் வீட்டை காலி செய்ய மறுப்பதாக ராஜ்குமார் என் மீதும், என் தந்தை மீதும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணையின் போது என்னிடம் பெற்ற பணம் மற்றும் நகையை திருப்பி தந்தால் வீட்டை காலி செய்வதாக தெரிவித்தோம். இதையடுத்து போலீசார் என் மீது விபசார வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

13 நாளுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையானேன். என் மீதான பொய் வழக்கு குறித்து துணை சூப்பிரண்டிடம் புகார் செய்தேன். அதன் பேரில் நடந்த விசாரணையில் எனது குற்றச்சாட்டு உண்மை என்பது தெரிய வந்தது.

போலீசார் என்னை விபசார வழக்கில் கைது செய்ததால் எனது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவும், இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, பொய்யாக விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்கும்படி உத்தரவிட்டார்.


Next Story