போலி பிறப்பு சான்றிதழ் வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
போலி பிறப்பு சான்றிதழ் வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளையைச் சேர்ந்த ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சிங்கப்பூருக்கு சென்று வேலை பார்க்க முடிவு செய்து, எனக்கு பாஸ்போர்ட் கேட்டு மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். இதுசம்பந்தமான விசாரணையில் என்னுடைய பிறப்புச் சான்றிதழ் போலியானது என்று தெரிவிக்கப்பட்டது.
இதே போல மேலும் பலர் போலி பிறப்பு சான்றிதழ் இணைத்து, பாஸ்போர்ட் கேட்டு இருந்தது தெரிந்தது. இந்த விவகாரம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் மதுரை பாஸ்போர்ட் அதிகாரி புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2017-ம் ஆண்டில் குற்ற வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் என்னை சாட்சியாக சேர்த்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் எனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்து விட்டனர். குற்ற வழக்கில் சாட்சியாக மட்டுமே என்னை சேர்த்து உள்ளனர். எனவே எனக்கு பாஸ்போர்ட் வழங்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது ஆஜராகி, மனுதாரர் எந்த குற்றச்சம்பவத்திலும் ஈடுபடவில்லை. போலி பிறப்பு சான்றிதழ் விவகாரத்தில் மனுதாரருக்கு தொடர்பு இல்லை. சாட்சியாக மட்டுமே சேர்க்கப்பட்டு உள்ளார் என வாதாடினார்.
விசாரணை முடிவில், போலி பிறப்பு சான்றிதழ் விவகாரம் தொடர்பான வழக்கில் மனுதாரர் சாட்சி மட்டும்தான். இதை காரணம் காட்டி, அவருக்கு பாஸ்போர்ட் வழங்கமாட்டோம் என அதிகாரிகள் மறுக்க முடியாது. பாஸ்போர்ட் அதிகாரியின் விசாரணைக்கு மனுதாரர் முறையாக ஆஜராக விளக்கம் அளிக்க வேண்டும். குற்ற வழக்கில் சாட்சியாக இருக்கும் விவகாரத்தை தவிர மற்ற தகுதிகளை பரிசீலித்து, மனுதாரருக்கு பாஸ்போர்ட்டை 8 வாரத்தில் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.