நரிக்குடி அருகே மருது சகோதரர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க கோரி வழக்கு- அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மருது சகோதரர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க கோரிய வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
மதுரையை சேர்ந்த முத்துப்பாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மருது சகோதரர்கள் சிவகங்கை சமஸ்தானத்தை ஆட்சி செய்தனர். இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதால் தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் படைகள் குறித்து "வளரி" என்ற ஆங்கிலேய புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மருது சகோதரர்கள் பல கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் கட்டுவதற்காக இடம் ஒதுக்கியுள்ளனர். மருது சகோதரர்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி முக்குளம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். அதை நிராகரித்துவிட்டனர். எனது மனுவின் அடிப்படையில் அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக வருவாய்துறை செயலாளர், விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.