கோவிலில் சிலை திருட்டு வழக்கில் 3 பேருக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனை உறுதி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கோவிலில் சிலை திருட்டு வழக்கில் 3 பேருக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனை உறுதி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

தஞ்சாவூர் கோவிலில் சிலைகளை திருடிய வழக்கில் 3 பேருக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


தஞ்சாவூர் கோவிலில் சிலைகளை திருடிய வழக்கில் 3 பேருக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சிலை திருட்டு வழக்கு

தஞ்சாவூர் மாவட்டம் மருவூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தில்லைஸ்தானம் கிருதாபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள உலோக சிலைகளை ஒரு கும்பல், கடந்த 2010-ம் ஆண்டில் திருடிச் சென்றது. இந்த சம்பவம் குறித்து மருவூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஜஸ்டின், ஆல்ட்ரின் பிரபு, திவாகர் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில் 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2015-ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் தஞ்சாவூர் மாவட்ட கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

மேல்முறையீடு

இந்த மேல்முறையீட்டு மனுக்களை மாவட்ட நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை மறு ஆய்வு செய்து, தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி அவர்கள் 3 பேரும் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் வக்கீல்கள் ஆஜராகி, மனுதாரர்கள் மீது சட்டவிரோதமாக வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வாதாடினார்கள்.

தண்டனை உறுதி

அப்போது அரசு வக்கீல் டி.செந்தில்குமார் ஆஜராகி, இந்த வழக்கில் மொத்தம் 4 பேர் கைதானார்கள். அவர்களில் மனுதாரர்கள் 3 பேர் தவிர, மற்றொருவர் தனக்கு விதித்த தண்டனை காலம் முழுவதையும் சிறையில் முறையாக அனுபவித்து முடித்துவிட்டார். மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் கீழ்கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டு உள்ளன. மனுதாரர்கள் காவிரிக்கரையோரத்தில் சிலைகளை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், மனுதாரர்கள் 3 பேர் மீதான வழக்கில் உரிய சாட்சியங்கள், ஆவணங்கள் அடிப்படையில் கீழ் கோர்ட்டு தண்டனை விதித்து உள்ளது. எனவே அந்த தண்டனை உறுதி செய்யப்படுகிறது. உடனடியாக 3 பேரையும் சிறையில் அடைக்க தஞ்சாவூர் மாவட்ட கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, இந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.


Next Story