"ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தாமதித்தால் கடும் அபராதம் விதிப்போம்" - அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை
ஆக்கிரமிப்பு விவகாரங்களில் நடவடிக்கை எடுக்க தாமதித்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.
ஆக்கிரமிப்பு விவகாரங்களில் நடவடிக்கை எடுக்க தாமதித்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.
அவமதிப்பு வழக்கு
நட்டாத்தி நாடார் உறவின்முறை சங்கத்தின் செயலாளர் ஜெயபால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறியிருந்ததாவது:-
மதுரை மாவட்டம் எழுமலையில் உள்ள எங்கள் சங்கத்துக்கு சொந்தமான கட்டிடத்தை தனிநபர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து ஓட்டல் நடத்தினார். அந்த சமயத்தில் ஓட்டலின் முன்பு ஆக்கிரமித்து டீக்கடை நடத்தினார். குத்தகை காலம் முடிந்த உடன், சங்க கட்டிடத்தில் இருந்து வெளியேறினார். ஆனால் ஆக்கிரமிப்பு பகுதியில் டீக்கடையை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலன் இல்லாததால், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அதன்படி, எங்கள் மனுவை 8 வாரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த கெடு முடிந்தும், இதுவரை கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ஆரோக்கியம் அல்ல
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- அதிர்ஷ்டவசமாக பிரதிவாதிக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகு, ஆக்கிரமிப்பாளரே பெருந்தன்மையுடன் ஆக்கிரமிப்பை அகற்றினார். ஆக்கிரமிப்பை அகற்றும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டும் உரிய நேரத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பின்பு நோட்டீஸ் அனுப்பியதால், ஆக்கிரமிப்பாளரே தன்னுடைய ஆக்கிரமிப்பை அகற்றியுள்ளார்.
இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுத்த எழுமலை பேரூராட்சி செயல் அலுவலரை பாராட்டுகிறோம். அதே நேரத்தில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் வரை காத்திருக்கும் வழக்கத்தை அதிகாரிகள் கடைபிடிக்கின்றனர். இது ஆரோக்கியமான போக்கு அல்ல.
கடும் அபராதம் விதிப்போம்
இதற்காக தற்போது நாங்கள் அபராதம் விதிக்கவில்லை. இனியும் இந்த போக்கை கடைபிடித்தால் அதிகாரிகள் கடுமையான அபராதம் செலுத்துமாறு உத்தரவிடுவோம் என்பதை தெளிவுபடுத்துகிறோம். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.