பேட்மிண்டன் போட்டியில் மதுரை இந்தியன்ஸ் அணி சாம்பியன்


பேட்மிண்டன் போட்டியில் மதுரை இந்தியன்ஸ் அணி சாம்பியன்
x

பேட்மிண்டன் போட்டியில் மதுரை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

திருச்சி

ஜூனியர் பேட்மிண்டன் லீக்

திருச்சி ஜமால்முகமது கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் ஜூனியர் பேட்மிண்டன் லீக் (ஜே.பி.எல். சீசன்-2) போட்டிகள் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 'ஏ' பிரிவில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ், விருதை வேங்கைஸ், தஞ்சை தலைவாஸ், திருவாரூர் டெல்டாகிங்ஸ் அணிகளும். 'பி' பிரிவில் திருச்சி தமிழ் வீராஸ், ரெயின்போ ராக்கர்ஸ், கோவை சூப்பர்கிங்ஸ், மதுரை இந்தியன்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்று விளையாடின.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. முதல் அரை இறுதி போட்டியில் விருதை வேங்கைஸ் அணி, மதுரை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் மதுரை இந்தியன்ஸ் அணி 3-2 என்ற செட் கணக்கில் விருதை வேங்கைஸ் அணியை தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 2-வது அரை இறுதி போட்டியில் பலம் வாய்ந்த திருச்சி தமிழ் வீராஸ் அணி, தஞ்சை தலைவாஸ் அணியுடன் மோதியது. இதில் திருச்சி தமிழ் வீராஸ் அணி 3-2 என்ற செட் கணக்கில் தஞ்சை தலைவாஸ் அணியை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மதுரை இந்தியன்ஸ் அணி சாம்பியன்

நேற்று மாலை திருச்சி தமிழ் வீராஸ் - மதுரை இந்தியன்ஸ் அணிகள் இறுதி போட்டியில் மோதின. இதில் 3-2 என்ற செட் கணக்கில் மதுரை இந்தியன்ஸ் வெற்றி பெற்று ஜூனியர் பேட்மிண்டன் லீக்-2 போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது. பின்னர் பரிசு அளிப்பு விழா நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க செயலாளர் அருணாச்சலம் கலந்து கொண்டு, சாம்பியன் பட்டம் பெற்ற மதுரை இந்தியன்ஸ் அணிக்கு பரிசு கோப்பையை வழங்கினார். மேலும் ரூ.30 லட்சம் பரிசு தொகையும், பதக்கமும் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 2-வது இடம் பிடித்த திருச்சி தமிழ் வீராஸ் அணி வீரர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு மற்றும் பதக்கமும் வழங்கப்பட்டன. இதில் 3-வது இடம் பிடித்த தஞ்சை தலைவாஸ் அணிக்கு ரூ.10 லட்சம் பரிசும், 4-வது இடம் பிடித்த விருதை வேங்கைஸ் அணிக்கு ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.


Next Story