மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டச்சான்றிதழ் பணமோசடி-பணியாளர் கைது
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டச்சான்றிதழ் பணமோசடி-பணியாளர் கைது
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டச்சான்றிதழுக்காக பணம் பெற்று மோசடி செய்த விவகாரத்தில் பணியாளர் அழகப்பன் என்பவரை நாகமலைபுதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
பண மோசடி
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் உள்ளன. இதுதவிர, பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி மையத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, பல்கலைக்கழக மாணவர்களுக்கு மதிப்பெண், கல்வி நிறைவுச்சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், பட்டச்சான்றிதழ் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, தொலைநிலைக்கல்வியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ், பட்டச்சான்றிதழ் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வியில் முதுநிலை கணித பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் பல வருடங்கள் கடந்த பின்னரும் பட்டச்சான்றிதழ் பெறாமல் இருந்துள்ளார். பின்னர் கடந்த ஜூன் மாதம் பட்டச்சான்றிதழுக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதற்குரிய தொகையை பல்கலைக்கழக வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால், அவர் குறிப்பிட்ட சில சான்றிதழ்களை இணைக்கவில்லை என்று பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் துணைப்பதிவாளர் அவரை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, பட்டச்சான்றிதழ் பெற சுமார் ரூ.10 ஆயிரம் வரை செலவாகும்.
கைது
அந்த தொகையை தான் சொல்லும் ஜி.பே. எண்ணிற்கு அனுப்பினால் உடனடியாக பட்டச்சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். அதனை நம்பிய மாணவி, பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் பட்டச்சான்றிதழ் கிடைக்காததால் அவர், சம்பந்தப்பட்ட நபர் மீது பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் குறைதீர்ப்பு பிரிவுக்கு ஆன்லைன் மூலம் கடந்த மாதம் புகார் செய்தார்.
பண மோசடி விவகாரத்தில் ஜி.பே. எண் உள்பட 3 செல்போன் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் 2 எண்கள் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள கல்விநகர் முகவரியிலும், ஒரு எண் மாடக்குளம் முகவரியிலும் உள்ளது தெரியவந்தது. இதைதொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இது போன்ற முறைகேடுகளில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஒரு சிலர் ஈடுபட்டு வருவதால், இந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் கொடுத்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
அதன்படி, பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் நாகமலைபுதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பல்கலைக்கழக தேர்வாணையர் அலுவலகத்தில் பதிவு எழுத்தராக பணியாற்றி வரும் நாகமலைபுதுக்கோட்டை ராஜம்பாடி அழகப்பன்(வயது 46) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், அவர், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளிடமும் ரூ.20 ஆயிரம் வரை ஏமாற்றி பணம் பெற்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, நேற்று அழகப்பனை போலீசார் கைது செய்தனர்.