மதுரை மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 116 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


மதுரை மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 116 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

மதுரை மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 186 வழக்குகளில் 116 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதுரை


மதுரை மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 186 வழக்குகளில் 116 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடத்தலை தடுக்க நடவடிக்கை

தமிழகத்தில் உணவு பொருள் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டி.ஜி.பி.வன்னியபெருமாள் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தமிழகம் முழுவதும் அதனை தடுக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மதுரை மண்டலத்தில் உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விஜயகார்த்திக் அறிவுறுத்தலின் பேரில் மதுரை, விருதுநகர், நெல்லை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

116 டன் அரிசி பறிமுதல்

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மதுரை மண்டலத்தில் 209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 186 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்து 16 ஆயிரத்து 195 கிலோ (116 டன்) ரேஷன் அரிசி பறிமுதுல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 19 மோட்டார் சைக்கிள்கள், 3 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர அரசு மானியத்தில் வழங்கப்பட்ட வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டரை முறைகேடாக பயன்படுத்தியதாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 80 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் பதுக்கல் தொடர்பாக ஒரு வழக்கில் 3 ஆயிரம் லிட்டர் கலப்பட ஆயில் பறிமுதல் செய்துள்ளனர். ரேஷன் பருப்பு கடத்தல் தொடர்பாக 3 வழக்குகளில் 1342 கிலோ பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுளளது.

மாநில எல்லையில் சோதனை

கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திய ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோர்ட்டில் உள்ள 18 வழக்குகள் முடிக்கப்பட்டு தண்டனை பெற்று கொடுக்கப்பட்டிருக்கிறது. நிலுவையில் உள்ள வழக்குகளில் ஆஜராகாத 9 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 57 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக-கேரளா எல்லைகளான போடி மெட்டு, கம்பம், குமுளி, புளியரை, களியக்காவிளை, நீரடி, செரிகோலா ஆகிய சோதனை சாவடிகளில் இரவு பகலாக வாகன சோதனை நடத்தி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.


Next Story