மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்- பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தரிசனம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தரிசனம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
கவர்னர் வருகை
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்தார். மாலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டார்.
மாலை 4 மணி அளவில், மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் அம்மன் சன்னதி பகுதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பட்டர்கள் செந்தில், ஹலாஸ் ஆகியோர் பூரணகும்ப மரியாதை அளித்தனர். பின்னர் அவரை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். கவர்னருடன், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் பிபேக்டெப்ராய் மற்றும் அதிகாரிகளும் வந்திருந்தனர்.
யானைக்கு கரும்பு கொடுத்தார்
மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகளில் கவர்னர் தரிசனம் செய்தார், கொடிமரத்தையும் வணங்கினார். மீனாட்சி அம்மன் குங்குமம், விபூதி, லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோவில் யானைக்கு கவர்னர் கரும்பு கொடுத்தார். சுமார் 40 நிமிடம் கோவிலில் இருந்த அவர், பின்னர் காரில் நெல்லைக்கு புறப்பட்டார்.
கவர்னர் தரிசனம் செய்தபோது கோவிலுக்குள் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். தரிசனம் முடிந்து அவர் வெளியே வந்தபோது, பக்தர்கள், பொதுமக்களை பார்த்து வணக்கம் தெரிவித்தபடி சென்றார்.
கவர்னர் வருகையையொட்டி மதுரை விமான நிலையம், விருந்தினர் மாளிகை, மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.