மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கீழடியில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்
மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கீழடியில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என ெதால்லியல் ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருப்புவனம்,
மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கீழடியில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என ெதால்லியல் ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கீழடியில் அகழாய்வு
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்சமயம் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடக்கிறது. இதுவரை கீழடியில் மட்டும் சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவை என தெரிய வருகிறது.
மேலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்களை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏதுவாக ரூ.11.03 கோடியில் அருங்காட்சியகம் கொந்தகை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 2 ஏக்கரில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் நிறைவு பெற்று சில வாரங்களில் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட உள்ளது.
பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்
பின்பு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்வையிட ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அருங்காட்சியகம் திறக்கப்பட்டு விட்டால் பார்வையாளர்கள் அதிகம் பேர் தினசரி வருவார்கள்.
தற்சமயம் கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணிகளை பார்க்க வருபவர்களும் அருங்காட்சியக கட்டிட பணிகளையும் பார்வையிட்டு செல்கின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மதுரை ரிங்ரோடு வந்து வாடகை வாகனங்களில் கூடுதலாக பணம் கொடுத்து வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மதுரை- பரமக்குடி நான்கு வழிச்சாலையில், கீழடியில் பஸ் நிறுத்தம் அமைத்து அரசு, தனியார் பஸ்கள் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் வெளி மாவட்ட பார்வையாளர்கள் வந்து பார்வையிட்டு செல்ல மிகவும் வசதியாக இருக்கும் எனவும் தொல்லியல் ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.