கோவை சிறையில் மதுரை சகோதரிகள் உண்ணாவிரதம்
கோவை சிறையில் மதுரை சகோதரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதற்கு மதுரையை சேர்ந்த நந்தினி (வயது 30), அவரது சகோதரி நிரஞ்சனா (25) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஊட்டி சென்று போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
இதற்காக கடந்த மாதம் 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருப்பதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது. இதுகுறித்து சூலூர் போலீசார் கோவைக்கு பஸ்சில் வந்த நந்தினி, நிரஞ்சனா ஆகியோரை தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் 2 பேரும் பெண் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளதாகவும், அரசாங்கமே முன்வந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரியும் கடந்த 26-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு சூப்பிரண்டு ஊர்மிளா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு, உணவு சாப்பிட்டனர்.