மதுரை ரெயில் விபத்து: கள்ளச்சந்தையில் சிலிண்டர் வாங்கியது அம்பலம்


மதுரை ரெயில் விபத்து: கள்ளச்சந்தையில் சிலிண்டர் வாங்கியது அம்பலம்
x
தினத்தந்தி 28 Aug 2023 2:27 PM IST (Updated: 28 Aug 2023 3:53 PM IST)
t-max-icont-min-icon

ரெயில் பெட்டி தீ விபத்து குறித்து ரெயில்வே போலீசார், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை,

உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு 63 பேர் ரெயில் மூலம் மதுரை ரெயில் நிலையம் வந்தனர். அவர்களுக்கு தனியாக ஒரு பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரையில் அந்த பெட்டி மட்டும் தனியாக கழற்றி போடிலைன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அங்கு நேற்று முன்தினம் அதிகாலை டீ போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அந்த பெட்டியில் இருந்த 5 ஆண்கள், 4 பெண்கள் என 9 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து ரெயில்வே போலீசார், அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட காரணமாக இருந்த சிலிண்டரை, கள்ளச்சந்தையில் வாங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்ட சுற்றுலா நிறுவன ஊழியர்களிடம் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து சுற்றுலா நிறுவன ஊழியர்கள் எரிவாயு சிலிண்டர் வாங்கியதும், அந்த சிலிண்டரில் வால்வு சரியாக இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story