மதுரை ரெயில் தீ விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம், கட்டணமில்லா தொலைபேசி எண்கள்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு


மதுரை ரெயில் தீ விபத்து:  ரூ.10 லட்சம் நிவாரணம், கட்டணமில்லா தொலைபேசி எண்கள்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Aug 2023 9:58 AM IST (Updated: 26 Aug 2023 11:22 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தெற்கு ரெயில்வே தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளது.

மதுரை,

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மீக சுற்றுலாவுக்காக பயணிகளை ஏற்றி கொண்டு ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. அதில் இருந்த பக்தர்கள் அனைவரும் நாகர்கோவிலில் பத்மநாபசுவாமி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனை முடித்து விட்டு அவர்கள் மதுரைக்கு திரும்பியுள்ளனர்.

அந்த ரெயிலானது, மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள மதுரை போடி லைன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தபோது, பயணிகள் சிலர் சமையல் செய்ய முற்பட்டனர். இதில், சிலிண்டர் வெடித்து ரெயில் பெட்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அது மளமளவென பற்றி எரிந்து அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியது. அப்போது, ரெயிலில் கடைசியாக இருந்த சிறப்பு முன்பதிவு ரெயில் பெட்டியில் 90 பேர் இருந்துள்ளனர். தீ விபத்து பற்றி அறிந்ததும் 60-க்கும் மேற்பட்டோர் கீழே குதித்து தப்பினர்.

எனினும், இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்தனர். இதுபற்றி தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்தியில், மதுரையில் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இதுபற்றி விரிவான விசாரணை நடந்து வருகிறது என அறிவித்து உள்ளது.

தொடர்ந்து தீ விபத்து தொடர்பாக ரெயில் பயணிகளுக்கு உதவ, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, 9360552608, 8015681915 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. ரெயில் விபத்து பற்றி அமைச்சர், ரெயில்வே உயரதிகாரிகள், காவல் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.


Next Story