டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை குடியிருப்புக்குள் புகுந்தது


டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை குடியிருப்புக்குள் புகுந்தது
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை குடியிருப்புக்குள் புகுந்தது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை குடியிருப்புக்குள் புகுந்தது. அப்போது பொதுமக்களை நோக்கி யானை வந்ததால் அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

மக்னா யானை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை ஒன்று புகுந்தது. தொடர்ந்து இந்த யானை விளைநிலங்களுக்குள் புகுந்து கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. இதையடுத்து அந்த யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். தொடர்ந்து யானையை பிடிக்க கடந்த 5-ந் தேதி பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் உள்ள கோழி கமுத்தி யானை முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை அழைத்து செல்லப்பட்டது. பின்னர் மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தொடர்ந்து அந்த மக்னா யானையை 6-ந் தேதி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள வரகளியாறு அடர்ந்த வனத்தில் இறக்கி விடப்பட்டது.

குடியிருப்புக்குள் புகுந்தது

இந்த மக்னா யானையை கண்காணிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மக்னா யானை வனப்பகுதியில் ஒரே இடத்தில் நிற்காமல் சுற்றி வந்தது. திடீரென இந்த யானை அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோழிகமுத்தி, அம்புலி, செம்மனாம்பதி வழியாக வனப்பகுதிக்குள் வந்தது.

பின்னர் மக்னா யானை அங்கிருந்து மாரப்பகவுண்டன்புதூர், செம்மேடு திம்பங்குத்து, தப்பட்டைகிளவன்புதூர், ராமநாதபுரம், ராமபட்டினம், தேவம்பாடிவலசு ஆகிய கிராமங்கள் வழியாக நடந்து குடியிருப்பு பகுதியை நோக்கி வந்தது. யானையை கண்காணித்துக்கொண்டு வேட்டைத்தடுப்பு காவலர்களும் பின்தொடர்ந்து வந்தனர். இதற்கிைடயில் குடியிருப்பு பகுதிக்குள் மக்னா யானை புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைநதனர்

விவசாய நிலத்தில் உலா

வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த மக்னா யானை வயல்வெளிகளில் ஜாலியாக உலா வந்தது. விவசாய வேலைக்கு சென்றவர்கள் காட்டு யானையை பார்த்து அச்சம் அடைந்தனர். ஆனால் மக்னா யானை அட்டகாசம் செய்யாமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்ததாலும், யானையை வனத்துறையினர் கண்காணித்து சென்றதாலும் நிம்மதி அடைந்்தனர்.

இதற்கிடையில், குடியிருப்பு பகுதிக்குள் யானை புகுந்ததை அறிந்த பொள்ளாச்சி போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மக்னா யானை கோவிந்தனூரை நோக்கி சென்றதால், அங்கு முன்கூட்டியே வடக்கிபாாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி, பாதுகாப்பாக செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை வடக்கி பாளையம்-நடுப்பணி சாலையை கடக்கும் என்பதால் கோவிந்தனூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களை கலைந்து போக அறிவுறுத்தினர். ஆனாலும் சிலர்் யானையை செல்போனில் படம் எடுக்க ஆர்வம் காட்டியதால் அங்கிருந்து செல்லாமல் இருந்தனர்.

அப்போது சாலையை கடக்க முயன்ற மக்னா யானை திடீரென சாலையில் வடக்கிபாளையம் நோக்கி சென்றது. இதனால் யானையை பார்க்க நின்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நடந்து சென்றது.

இந்த நிலையில் மக்னா யானை களத்்தூர் பகுதியில் சென்றபோது, களைப்படைந்து புதருக்குள் படுத்து தூங்கியது. யானையை பார்க்க அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் பொதுமக்களை அங்கிருந்து கலைந்துபோக செய்தனர்.

ஆலோசனை

தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்தார். தொடர்ந்து மக்னா யானையை பார்வையிட்டார். பின்னர் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவதேஜா, உதவி வன பாதுகாவலர் செல்வம், கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோருடன் மக்னா யானையை வனப்பகுதிக்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.

மக்னா யானை களத்தூர் பகுதியில் ஓய்வெடுத்து கொண்டிருந்ததால் வன சரகர்கள் புகழேந்தி, சுந்தரவேல், மணிகண்டன் மற்றும் தடுப்பு காவலர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை, அங்கிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட விரைந்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

-----------------

(பாக்ஸ் )மக்னா யானையை மதுக்கரை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல திட்டம்

ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியன் பேட்டி

வனப்பகுதியில் இருந்து மக்னா யானை வெளியே வந்தது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தர்மபுரி பகுதியில் இருந்து டாப்சிலிப் வனப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ள மக்னா யானை சாதுவானது. இந்த யானை விளைநில பயிர்களை சேதம் செய்து வந்ததே தவிர பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்த யானை யை பிடித்து வந்து வனப்பகுதியில் விட்டபோது, தொடர்ந்து வெளியே வர முயற்சி செய்தது. இந்த நிலையில் தான் தற்போது, கிராம பகுதிக்குள் மக்னா யானை புகுந்துள்ளது. யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது மக்னா யானை நல்ல நிலையில் உள்ளது. இந்த யானை மதுக்கரை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஆட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் யானையை ஒரே திசையில் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும் இரவு நேரங்களில் யாரும் சுற்றித்திரிய வேண்டாம். யானை ஒவ்வொரு கிராமமாக நகர்ந்து செல்வதால், முன்கூட்டியே அந்த கிராம பகுதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கேரள மாநிலம் அருகே உள்ளதால், கேரள வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

------------

(பாக்ஸ்) 35 கி.மீ தூரம் நடந்த மக்னா யானை

அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு செம்மனாம்பதி வனப்பகுதியில் வெளியேறியது. தொடர்ந்து வெளியேறிய மக்னா யானை மாரப்பகவுண்டன்புதூர், செம்மேடு திம்பங்குத்து, தப்பட்டைகிளவன்புதூர், ராமநாதபுரம், ராமபட்டினம், தேவம்பாடிவலசு, கோவிந்தனூர் ஆகிய கிராமங்கள் வழியாக வந்து 12.45 மணியளவில் களத்தூர் பகுதியில் உள்ள புதருக்குள் படுத்து தூங்கியது. மக்னா யானை சமார் 35 கி.மீ. தூரம் நடந்து வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

----------------

(பாக்ஸ்) 'செல்பி' எடுக்க ஆர்வம் காட்டிய பொதுமக்கள்

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை கிராமங்கள் வழியாக நடந்து சென்றதை அறிந்த அந்்த பகுதி மக்கள் பலர் யானைைய செல்போனில் படம் பிடிக்கவும், செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர். கோவிந்தனூரில் யானை வருவதற்கு முன்பே பலர் தங்களது செல்போனோடு அங்கு திரண்டனர். அவர்களை அங்கிருந்து செல்லும்படி வனத்துறையினர், போலீசார் அறிவுறுத்தியும் கேட்காமல் யானையை படம் பிடிக்க காத்திருந்தனர். அப்போது தான் யானை திடீரென அவர்களை நோக்கி சென்றது. இதனால் அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.


Next Story