மக்னா யானையை பிடிக்க முடிவு


மக்னா யானையை பிடிக்க முடிவு
x
தினத்தந்தி 22 July 2023 1:30 AM IST (Updated: 22 July 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால் மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால் மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மக்னா யானை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மக்னா யானை ஒன்று அட்டகாசம் செய்தது. இதையடுத்து அந்த யானையை கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி பிடித்து டாப்சிலிப் அருகே உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. இதை தொடர்ந்து அந்த யானை கடந்த 22-ந்தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறி பொள்ளாச்சி பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்தது. பின்னர் கோவை பேரூர் தேவிசிறை அணைக்கட்டு பகுதியில் நின்ற யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வால்பாறை அருகே மானாம்பள்ளி வனச்சரகத்தில் கொண்டு விட்டனர்.

ஆனால் ஒரு வார காலத்திற்கு பிறகு மக்னா யானை அங்கிருந்து டாப்சிலிப் வழியாக சேத்துமடை வனப்பகுதிக்கு வந்தது. இதற்கிடையில் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரேடியோ காலர் பழுதானதால் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினரால் கண்காணிக்க முடியவில்லை. இந்த நிலையில் தென்னை, மா மரம், பந்தல் காய்கறிகளை மக்னா யானை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. இதனால் விவசாயிகள், வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பொதுமக்கள் வலியுறுத்தல்

இதை தொடர்ந்து தற்போது மக்னா யானையை பிடிக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. இதையடுத்து யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகளை ஆய்வு செய்தவற்கு ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் நேற்று சரளப்பதி பகுதிக்கு வந்தார். பின்னர் வனத்துறை அதிகாரிகள், டாக்டர்கள் குழுவிடம் யானை பிடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் யானையை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பிடிக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்றார். இதற்கிடையில் அங்கு வந்த பொதுமக்கள் கள இயக்குனரிடம் யானையை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு அவர் யானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். அப்போது துணை இயக்குனர் பார்கவ தேஜா, உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் புகழேந்தி மற்றும் கால்நடை டாக்டர்கள், வனத்துறையினர் உடன் இருந்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

டாக்டர்கள் குழு கண்காணிப்பு

மக்னா யானையை பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து சின்னதம்பி, கபில்தேவ், சுயம்பு ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. மேலும் கால்நடை டாக்டர்கள் சுகுமார், விஜயராகவன், சதாசிவம், ராஜேஸ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் யானையின் உடல்நலம் எப்போது, எங்கு வைத்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஓரிரு நாட்களில் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story