சிறுகுன்றா எஸ்டேட்டுக்கு இடம்பெயர்ந்த மக்னா யானை


சிறுகுன்றா எஸ்டேட்டுக்கு இடம்பெயர்ந்த மக்னா யானை
x
தினத்தந்தி 24 Aug 2023 1:00 AM IST (Updated: 24 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

சரளபதியில் பிடித்து சின்னக்கல்லாறில் விடப்பட்ட மக்னா யானை, சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. அது மீண்டும் மானாம்பள்ளிக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால், வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

சரளபதியில் பிடித்து சின்னக்கல்லாறில் விடப்பட்ட மக்னா யானை, சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. அது மீண்டும் மானாம்பள்ளிக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால், வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

மக்னா யானை

தர்மபுரியில் அட்டகாசம் செய்து வந்த மக்னா யானையை கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி வனத்துறையினர் பிடித்து, ஆனைமலை அருகே உள்ள மானாம்பள்ளி வனப்பகுதியில் விட்டனர். இந்த யானை, சரளபதி பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்ததால் ஜூலை மாதம் 31-ந் தேதி பிடித்து, வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லாறு வனப்பகுதியில் விட்டனர். மேலும் ரேடியோ காலர் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்னா யானை, அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே முகாமிட்டு வந்தது. பின்னர் ஊசிமலை டாப் மற்றும் அக்காமலை புல்மேடு பகுதிக்கு இடம்பெயர்ந்தது. தொடர்ந்து அங்கிருந்து, சிங்கோனா பகுதிக்குள் புகுந்தது.

சிறுகுன்றாவில் உலா

இ்ந்த நிலையில் நேற்று காலையில் சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு வந்த மக்னா யானை, பசுந்தீவனங்களை தின்றவாறு உலா வந்தது. அந்த யானை, ஒவ்வொரு எஸ்டேட் பகுதிக்கும் இடம்பெயர்ந்து சென்று வருவதால், அதை கண்காணிக்கும் வனத்துறையினர் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

ஏற்கனவே கேரள வனப்பகுதியில் இருந்து வால்பாறை வனப்பகுதிக்கு காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டுயானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடபட்டு வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு

இந்த சமயத்தில் மக்னா யானையையும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடாமல் கண்காணிக்க வேண்டி உள்ளதால், அவதிப்பட்டு வருகிறார்கள. அந்த யானை மீண்டும் மானாம்பள்ளி வனப்பகுதிக்கு செல்லும் அபாயம் உள்ளது. மேலும் அங்கிருந்து ஆனைமலை, சேத்துமடை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

1 More update

Next Story