ரெயில் அடிபடாமல் தப்பிய மக்னா யானை

மதுக்கரை பகுதியில் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில் அடிபடாமல் தப்பிய மக்னா யானை வீடியோ வைரலாகி உள்ளது.
கோவை,
தர்மபுரி மாவட்டத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த மக்னா யானையை வனத்துறையினர் பிடித்து, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வனப்பகுதியில் விட்டனர். பின்னர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை, அங்கிருந்து சேத்துமடை வழியாக 140 கிலோ மீட்டர் ஊருக்குள் புகுந்து கோவையை நோக்கி வந்தது.
கோவை பேரூர் பகுதியில் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு மீண்டும் மானாம்பள்ளி மந்திரி மட்டம் என்ற வனப்பகுதியில் கொண்டு போய்விடப்பட்டது.
இந்த நிலையில் மக்னா யானை கோவைக்கு தப்பி வந்தபோது, மதுக்கரை அருகே திடீரென்று தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த தண்டவாளம் வழியாக வந்தது. இதனால் மக்னா யானை மீது ரெயில் மோதும் நிலை உருவானது. அப்போது அந்த பகுதியை சுற்றிலும் நின்ற விவசாயிகள் கூச்சல் போட்டு மக்னா யானையை விரட்டுகின்றனர்.
அப்போது மக்னா யானை நொடிப்பொழுதில் தண்டவாளத்தைவிட்டு கடந்து செல்லவும், ரெயில் கடந்து சென்றது. இதனால் மக்னா யானை உயிர் தப்பி உள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "இவ்வளவு தூரத்துக்கு காட்டு யானையை ஊருக்குள் வரவிட்டு இருக்க கூடாது. இதனால் ரெயிலில் அடிபடும் சூழ்நிலை உருவானது. வனத்துறையினர் உடனடியாக மயக்க ஊசி செலுத்தி பிடித்து இருக்க வேண்டும். நல்லவேளையாக யானை உயிர் தப்பியது. ரெயில் தடம்புரளும் நிலையும் தவிர்க்கப்பட்டது. வனத்துறையினர் இனியாவது உஷாராக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.






