தென்னை மரங்களை சேதப்படுத்திய மக்னா யானை


தென்னை மரங்களை சேதப்படுத்திய மக்னா யானை
x
தினத்தந்தி 11 May 2023 5:45 AM IST (Updated: 11 May 2023 5:45 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே தோட்டங்களுக்குள் புகுந்து தென்னை மரங்களை மக்னா யானை சேதப்படுத்தி வருகிறது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே தோட்டங்களுக்குள் புகுந்து தென்னை மரங்களை மக்னா யானை சேதப்படுத்தி வருகிறது.

மக்னா யானை

தர்மபுரி மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட மக்னா யானை, ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது. அந்த யானை வனப்பகுதியை விட்டு வெளியே வந்து பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் ஊருக்குள் புகுந்தது. பின்னர் அந்த யானையை மயக்க ஊசி பிடித்து மானாம்பள்ளி வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். இதற்கிடையே யானையின் கழுத்தில் பொருத்தப்பட்ட ரேடியோ காலர் பழுதடைந்தது. இதனால் யானையின் இருப்பிடத்தை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்தநிலையில் யானை மீண்டும் டாப்சிலிப் வழியாக சேத்துமடை பகுதிக்கு வந்தது. மேலும் சரளப்பதிக்கு இரவில் வரும் யானை அதிகாலை வரை தென்னந்தோப்பு மற்றும் மாந்தோப்பில் முகாமிட்டு சேதப்படுத்தி வருகிறது. ஒரு மாந்தோப்பு முழுவதும் சேதப்படுத்திய நிலையில், தற்போது அடுத்த தோப்பிற்கு யானை வரத்தொடங்கி விட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தென்னை மரங்கள் சேதம்

மேலும் அதிகாலை நேரத்தில் சுற்றி திரிவதால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளதால், யானையை பிடித்து வேறு பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மானாம்பள்ளி வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை தற்போது பொள்ளாச்சி வனச்சரகம் சரளப்பகுதி பகுதியில் சுற்றி திரிந்து வருகிறது. இரவு 11 மணிக்கு வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானை, அதிகாலை 4 மணிக்கு பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கிறது. மேலும் மா மரங்கள், தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது.

யானை வனப்பகுதியை விட்டு வெளியே வந்தால் கும்கி யானைகளை கொண்டு விரட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இரவு நேரங்களில் தோட்டங்களில் மக்னா யானையின் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிகாலை நேரங்களில் தோட்டங்களுக்கு செல்வோர் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story