பருத்தியில் மெக்னீசிய சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது எப்படி?


பருத்தியில் மெக்னீசிய சத்து பற்றாக்குறையை  நிவர்த்தி செய்வது எப்படி?
x

பருத்தியில் மெக்னீசிய சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது எப்படி? என மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையா விளக்கம் அளித்தார்.

மயிலாடுதுறை


பருத்தியில் மெக்னீசிய சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது எப்படி? என மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையா விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மெக்னீசியம் பற்றாக்குறை

பருத்தி பயிரில் மெக்னீசியம் பற்றாக்குறையினால் இலைகள் சிவப்பு நிறமாக மாறும். இதனை நிவர்த்தி செய்தால் மகசூல் நிறைவாக பெறலாம்.பொதுவாக தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்வதற்கும், மணிச்சத்தை பயிர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்வதற்கும், எண்ணெய் மற்றும் கொழுப்புப்பொருட்களை தாவரங்கள் உற்பத்தி செய்வதற்கும் மக்னீசியம் தேவைப்படுகிறது. அதிக அளவில் மழை பொழியும் பகுதிகளிலும், மணல்சாரி நிலங்களிலும் அமிலத்தன்மை மிகுந்த நிலங்களிலும், களர் நிலங்களிலும் மக்னீசியம் பற்றாக்குறை காணப்படும். சாம்பல் சத்தை மிகுதியாக நிலத்தில் இடுவதாலும், பாசன நீரில் கால்சியம் உப்புங்கள் கூடுதலாக இருந்தாலும் மக்னீசியம் பற்றாக்குறை ஏற்படலாம். அம்மோனியம் சல்பேட் போன்ற உரங்களை அதிக அளவில் இடும் பொழுதும், இலை மக்கு மிகுந்த நிலங்களிலும் பற்றாக்குறை அறிகுறிகள் தென்படும்.

குறைபாட்டினால் தோன்றும் அறிகுறிகள்

பருத்தி பயிர்களில் பச்சை நிறத்திற்கு காரணமான பச்சைய மூலக்கூறின் மைய அயனியாக மக்னீசியம் விளங்குகிறது. மக்னீசியம் தாவரங்களில் உள்ள நொதிகளின் வேகப்பாட்டை சீர் செய்ய மிகவும் அவசியம்.

ஒளிச்சேர்க்கை சிட்ரிக் அமில சுழற்சி, கிளைக்காலியின்ஸ் போன்ற உயிர் வேதியியல்

வினைகளில் மக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது.

பயிரின் அடிப்பாகத்தில் உள்ள முதிர்ந்த இலைகள் முதலில் வெளுத்து பின் குங்குமம் சிவப்பு, ஆரஞ்சு, வெண்புள்ளிகள் தோன்றுகின்றன. இலை நரம்புகளுக்கிடையில் வெளிரிய மஞ்சள் நிறத்தில் வரி வரியாக கோடுகள் தோன்றும். பின்னர் கோடுகள் தோன்றிய இடம் வெண்மையாக மாறி இலைகள் பச்சையமற்று காணப்படும். பற்றாக்குறை முற்றிய நிலையில் இலைகள் சிவப்பு நிறமாக மாறி உலர்ந்து விடும்.

பருத்தி பயிரில் மெக்னீசியம் பற்றாக்குறையினால் இலைகள் சிவப்பு நிறமாக மாறும்.

நிவர்த்தி செய்யும் முறைகள்

15 கிராம் மெக்னீசியம் சல்பேட் 1 கிராம் சிங்க் சல்பேட் மற்றும் 10 கிராம் யூரியாவை 1 லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 50-வது மற்றும் 80-வது நாட்களில் இலை வழியாக பருத்தி பயிருக்கு தெளிக்க வேண்டும். மேலும் காய் உருவாகும் தருணத்தில் சிவப்பு நிற இலைகள் தென்பட்டால் 20 கிராம் மெக்னீசியம் சல்பேட் மற்றும் 10 கிராம் யூரியாவை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story