மகா சிவராத்திரி வழிபாடு


மகா சிவராத்திரி வழிபாடு
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

விஸ்வநாதர் கோவில்

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் அமைந்துள்ள ஸ்ரீ விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் சனி பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி நான்கு கால பூஜைகள், விசேஷ மகா ருத்ர ஜெப ஹோமம், வேத மந்திரங்கள், திருமுறைகள் ஓத ஸ்ரீ காசி விஸ்வநாத சாமிக்கு விசேஷ சகலவித திரவியங்களால் மகாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் அர்ச்சனை ஷோடச உபச்சார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து வேதா பாராயணம், பஞ்ச புராணமம் ஓத மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை அர்ச்சகர் சட்ட கணேசன் சிவாச்சாரியார் செய்திருந்தார்.

சிதம்பரேஸ்வரர்

கள்ளக்குறிச்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சிதம்பரேஸ்வரர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் 5 கால சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிவராத்திரியையொட்டி கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 10 அடி உயர ஏகபாத மூர்த்திகளுக்கு மாலை 5 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கோவிலின் உள்பிரகாரத்தை விடிய விடிய சுற்றி வந்து வழிபட்டனர்.

ஆதிபுரீஸ்வரர்

சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம் அமிர்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் அர்ச்சகர் நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து சிவராத்திரி முன்னிட்டு சாமிக்கு அபிஷேகம் செய்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் சங்கராபுரம் முதல் பாலமேடு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர், சன்னதி தெரு மணிமங்களநாயகி ஸமேத சங்கரலிங்கேஸ்வரர், மூக்கனூர் தாண்டுவனேஸ்வரர், மஞ்சபுத்தூர் கைலாசநாதர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன்கோவில்களில் பிரதோஷ மற்றும் சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தாிசனம்செய்தனர்.


Next Story