மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மகாளய அமாவாசை விழா


மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மகாளய அமாவாசை விழா
x

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற மகாளய அமாவாசை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம்

மேல்மலையனூர்,

மகாளய அமாவாசை

மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசையன்று விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் மகாளய அமாவாசை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

அமாவாசை விழாக்களில் மகாளய அமாவாசை விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மன், சிவபெருமானுக்கு பால் தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஊஞ்சல் உற்சவம்

இதில் தங்க கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு பல வித பூக்களால் வைஷ்ணவி தேவி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

தொடர்ந்து இரவு 11 மணியளவில் பம்பை, மேள தாளம் முழங்க ஊஞ்சல் உற்வசம் நடைபெற்றது. இதில் உற்சவ அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து இரவு 12 மணியளவில் அம்மனுக்கு குங்குமம் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, தாசில்தார் முகமது அலி உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனா்.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

இதையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் பலர் செய்திருந்தனர்.

பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.


Next Story