சதுரகிரியில் நாளை மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு


சதுரகிரியில் நாளை மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு
x

சதுரகிரியில் நாளை மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெறுவதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

சதுரகிரியில் நாளை மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெறுவதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மகாளய அமாவாசை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசை அன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வருகை புரிகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மகாளய அமாவாசைக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மகாளய அமாவாசை ஆகும். இந்த ஆண்டு பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு அபிஷேகம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், நெல்லை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மகாளய அமாவாசையன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு காலை 12 மணியில் இருந்து 2 மணி வரை 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாளய அமாவாசைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

பக்தர்கள் இரவில் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி இல்லை. பாதுகாப்பு பணியில் போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட உள்ளனர்.


Next Story