மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
சாதி பெயரை சொல்லி திட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பொள்ளாச்சி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
சாதி பெயரை சொல்லி திட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பொள்ளாச்சி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
வழித்தடம் மறைப்பு
பொள்ளாச்சி அருகே மரபேட்டையில் உள்ள பொட்டு மேடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அங்கு நாட்டுக்கல்பாளையத்தை சேர்ந்த சக்திநாராயணனுக்கு சொந்தமான நிலத்தை சுத்தம் செய்ய அவரது டிரைவர் கலைபிரபு சென்றார். அவர், பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை கொட்டியபோது, குடியிருப்புகளின் வழித்தடத்தை மறைத்து கொட்டியதாக கூறப்படுகிறது.
முற்றுகை
இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், அவரை தடுத்து நிறுத்தினர். உடனே அவர்களுடன், கலைபிரபு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.