மகாமாரியம்மன்-பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழா
மகாமாரியம்மன்-பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
தொட்டியம் அருகே உள்ள கிளிஞ்சிநத்தம் மகா மாரியம்மன் மற்றும் பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 16-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேர் திருவிழா நடைபெற்றது. சுமார் 27- அடி உயர தேரை பூக்களாலும், புடவையாலும் அலங்கரித்து தலையலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் தேரில் அமர்ந்திருந்த மாரியம்மனை தரிசனம் செய்தனர். கடந்த 3 நாட்களாக பகவதி அம்மன் தேரில் அமர்ந்து இருக்க கிளிஞ்சிநத்தத்தின் முக்கிய வீதி வழியாக பக்தர்கள் தலையிலும், தோளிலும் தூக்கி வந்தனர். தொடர்ந்து கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் கிளிஞ்சிநத்தம், அரங்கூர், தொட்டியம், கொளக்குடி, அப்பண்ணநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பாப்பாபட்டி மகா மாரியம்மன் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலில் தேர் திருவீதி உலா மற்றும் கிடா வெட்டு, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.