பெண்களுக்கான மகிளா மேன்மை சேமிப்பு திட்டத்தில் பயன்பெறலாம்-காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

பெண்களுக்கான மகிளா மேன்மை சேமிப்பு திட்டத்தில் பயன்பெறலாம் என காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி
காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ஹூசைன்அகமது விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- அனைத்து அஞ்சலகங்களிலும் மத்திய அரசின் மகிளா மேன்மை சேமிப்பு சான்றிதழ் திட்டம் கடந்த 1-ந்தேதி முதல் 7.5 சதவீதம் வட்டியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பெண்களுக்கான சிறப்பு திட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மட்டும் இத்திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். இந்த கணக்குதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை. குறைந்தது ரூ.100 முதல் ரூ.2 லட்சம் வரை வைப்பு தொகையாக செலுத்தலாம். மேலும் 2 ஆண்டுகள் 7.5 சதவீதம் கூட்டு வட்டி காலாண்டு அடிப்படையில் வழங்கப்படும்.
ஒருவர் இந்த திட்டத்தில் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கலாம். ஏற்கனவே தொடங்கப்பட்ட கணக்கிற்கும் அடுத்த கணக்கிற்கும் 3 மாத இடைவெளி இருக்க வேண்டும். மேலும் கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 2 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைகிறது. 40 சதவீதம் கையிருப்பு தொகையை கணக்கு தொடங்கிய ஓராண்டிற்கு பின்னர் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. கணக்கு தொடங்கி 6 மாதங்கள் கடந்த நிலையில் 5.5 சதவீத வட்டியுடன் கணக்கை முன் முதிர்வு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.