நகை-பணத்தை கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி கைது


நகை-பணத்தை கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி கைது
x

ஓய்வுபெற்ற வங்கி ஊழியரை கடத்தி நகை-பணத்தை கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

திருச்சி

ஓய்வுபெற்ற வங்கி ஊழியரை கடத்தி நகை-பணத்தை கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்

தா.பேட்டை அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் முத்துசாமி. ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். கடந்த ஆண்டு தா.பேட்டை அருகே உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வளையெடுப்பு கிராமம் அருகே வந்தபோது, காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் முத்துச்சாமியை வழிமறித்து மோட்டார் சைக்கிளிலுடன் காரில் கடத்தி சென்றனர். பின்னர் உப்பிலியபுரம் அருகே காட்டு பகுதியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து அவரிடம் இருந்த வீட்டு சாவியை எடுத்து வந்து வீட்டை திறந்து ரூ.12 லட்சம், 6 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்தசம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளைவழக்கில் தொடர்புடைய திவாகர், ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

முக்கியகுற்றவாளி

இதில் முக்கிய குற்றவாளியான உப்பிலியபுரம் அருகே வளையப்பட்டி பகுதியை சேர்ந்த சுதாகர் (43) என்பவரை தேடி வந்தனர். மேலும் அவரை பிடிக்க தா.பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணிகண்டன், போலீசார் உதயகுமார், பிரகாஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் திருச்சி ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் பகுதியில் சுதாகர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சுதாகரை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கத்தி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

30-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள்

பின்னர் சுதாகரை துறையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சுதாகர் கடலூர், சேலம், திருச்சி, புதுக்கோட்டை உள்பட 8 மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story