முக்கிய தேவை... 3-வது பாதை
கோவை ரெயில் நிலையத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கம் வழியாக 3-வது பாதை அமைப்பது முக்கிய தேவை என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கோவை ரெயில் நிலையத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கம் வழியாக 3-வது பாதை அமைப்பது முக்கிய தேவை என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கோவை ரெயில் நிலையம்
கோவையில் உள்ள ரெயில் நிலையம் வழியாக தினமும் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன.
இதனால் இந்த ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே ரெயில் நிலையம் எப்போதும் பயணிகளின் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.
இந்த ரெயில் நிலையத்துக்கு செல்ல 2 பாதைகள் உள்ளன. அது போன்று ரெயில் நிலையத்தில் இருந்து பிளாட்பாரத்துக்கு செல்ல 2 சுரங்க நடைபாதைகள் உள்ளன.
அதில் முதல் சுரங்க நடை பாதையை தான் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இதில், 2-வது சுரங்க நடைபாதை ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் தான் இருக்கிறது.
3-வது பாதை
பல கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட இந்த 2-வது சுரங்க நடைபாதையில் நகரும் படிக்கட்டு உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன.
இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் அருகில் இருந்து தாமஸ் கிளப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வழியாக 3-வது பாதை அமைக்க வேண்டும்.
இந்த பாதையை அமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டு களுக்கும் மேல் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இந்த பாதையை விரைவில் செய்து கொடுக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
இது குறித்து பயணிகள் கூறியதாவது:-
பயணிகளுக்கு வசதி
கோவை ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் (பிளாட்பாரம்) ரெயில் நிற்கும்போது அங்குள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தை தாண்டி பெட்டிகள் இருக்கும்.
இதனால் ரெயிலில் இருந்து இறங்குபவர்கள் பிரதான நுழைவு வாயில் வரை வந்து வெளியே செல்ல வேண்டியது இருக்கிறது.
ஆனால் கோவை கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள 3-வது பாதை திட்டத்தை நிறைவேற்றினால், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் அருகே இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வழியாக வெளியே ரோட்டுக்கு வந்து விடலாம்.
மேலும் அந்த வழியாக வந்து ரெயிலில் ஏறவும் மிக வசதியாக இருக்கும்.
நிறைவேற்ற வேண்டும்
மேலும் இதன் அருகில்தான் ரெயில் நிலையத்தில் 2-வது சுரங்க நடைபாதை உள்ளது.
இந்த 3-வது பாதை திட்டத்தை நிறைவேற்ற அதிக நிதியும் தேவைப்படாது. ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் அருகே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டால் போதும்.
தற்போது ரெயில் நிலையத்துக்கு இந்த வழியாக பயணிகள் சிலர் நடந்து வருகிறார்கள்.
ஆனால் சாலை குண்டும் குழியமாக இருப்பதால் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகள் பயன் பெறும் வகையில் கோவை ரெயில் நிலையத்துக்கு மிக முக்கிய தேவையான 3-வது பாதையை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.