ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணி 14 மணி நேரம் நடந்தது
நீடாமங்கலம் ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணி 14 மணி நேரம் நடந்தது.
நீடாமங்கலம்:-
நீடாமங்கலம் ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணி 14 மணி நேரம் நடந்தது.
பராமரிப்பு பணி
நீடாமங்கலத்தில் உள்ள ரெயில்வேகேட் தஞ்சை- நாகை இடையேயான தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே உள்ளது. இந்த ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பணிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பணிகள் தொடங்கின. ரெயில்வே என்ஜினீயர்கள் மேற்பார்வையில் 30-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
14 மணி நேரம்
அப்போது தார்ச்சாலையில் இருந்து சற்று கீழ்நோக்கி புதைந்திருந்த தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டது. நேற்று காலை 11 மணி வரை பணிகள் நடந்தன. 14 மணி நேரம் நடந்த இந்த பணி காரணமாக ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது.
நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தஞ்சையில் இருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி, காரைக்கால் செல்லும் பஸ்கள் போன்ற வாகனங்கள் தஞ்சையில் இருந்து நீடாமங்கலம் அண்ணாசிலை பகுதிக்கு வந்து அங்கிருந்து மன்னார்குடி வழியாக மேற்கண்ட ஊர்களுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டு இருந்தது.
ரெயில்வே கேட் திறப்பு
அதேபோல கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் வழியாக பட்டுக்கோட்டை வரை செல்லும் பஸ்கள் போன்ற வாகனங்கள் நீடாமங்கலம் வெண்ணாற்று பகுதியில் திருப்பி விடப்பட்டு கொரடாச்சேரி, லெட்சுமாங்குடி, மன்னார்குடி வழியாக இயக்கப்பட்டன.
கார்கள், சிறிய வேன்கள், இருசக்கர வாகனங்கள் நீடாமங்கலம் ரெயில்வே கேட்டை ஒட்டி உள்ள சிறு கீழ்ப்பாலம் வழியாக சென்றன. பராமரிப்பு பணி காரணமாக போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் நீடாமங்கலம் போலீசார் ஈடுபட்டனர். பராமரிப்பு பணிகள் முடிந்து காலையில் ரெயில்வே கேட் திறக்கப்பட்ட உடன் போக்குவரத்து வழக்கம்போல் நடந்தது.