கூடலூர் கோட்டத்தில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க தடுப்பணைகள், குட்டைகள் பராமரிப்பு-மாவட்ட வன அலுவலர் தகவல்


தினத்தந்தி 25 Aug 2023 1:00 AM IST (Updated: 25 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் கோட்டத்தில் வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி ஊருக்குள் வருவதை தவிர்க்க நபார்டு திட்டத்தின் கீழ் தடுப்பணைகள் மற்றும் நீர்க்கசிவு குட்டைகள் பராமரிக்கப்பட்டுள்ளதாக வன அலுவலர் கொம்மு ஓம்காரம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் கோட்டத்தில் வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி ஊருக்குள் வருவதை தவிர்க்க நபார்டு திட்டத்தின் கீழ் தடுப்பணைகள் மற்றும் நீர்க்கசிவு குட்டைகள் பராமரிக்கப்பட்டுள்ளதாக வன அலுவலர் கொம்மு ஓம்காரம் தெரிவித்துள்ளார்.

ஊருக்குள் வரும் வன விலங்குகள்

கூடலூர் வனக்கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, நாடுகாணி, தேவாலா, சேரம்பாடி, பிதிர் காடு உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளது. காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருகிறது. இதில் காட்டு யானைகள் கோடை காலத்தில் தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு காரணமாக ஊருக்குள் வந்து இடையூறு செய்கிறது.

இதனால் மனித- வனவிலங்கு மோதல்கள் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி ஊருக்குள் வருவதை தவிர்க்க வனக்கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பின்றி கிடந்த தடுப்பணைகள் மற்றும் நீர் கசிவு குட்டைகளை சீரமைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் 2022-23-ம் ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் பல லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

தடுப்பணைகள், குட்டைகள் சீரமைப்பு

மேலும் கூடலூர் வனக்கோட்டத்தில் வன விலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியில் புதிய தடுப்பணைகள் மற்றும் கசிவு நீர் குட்டைகளும் கட்டப்பட்டுள்ளது. இதேபோல் பழைய கசிவுநீர் குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் கடந்த சில மாதங்களாக சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

தற்போது வனத்துறை மூலம் கட்டப்பட்டுள்ள நீர் நிலைகளில் நீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் காட்டு யானைகள், புலி உள்ளிட்ட வன விலங்குகள் பகல் மதிய வேளையில் அதிகம் காணப்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, நடப்பாண்டில் பருவமழை இதுவரை முறையாக பெய்யவில்லை. இதனால் கோடை காலத்தில் தண்ணீர் இல்லாமல் வனவிலங்குகள் ஊருக்குள் வர அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் வனத்துக்குள் உள்ள தடுப்பணைகளை சீரமைத்து அதிக நீர் தேக்கி வைத்தால் மட்டுமே வனவிலங்குகள் நீர் தேவைக்காக ஊருக்குள் வருவது தவிர்க்கப்படும். மேலும் மனித- வனவிலங்கு மோதல் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story