புகழூர் வாய்க்காலில் பராமரிப்பு பணிகள்


புகழூர் வாய்க்காலில் பராமரிப்பு பணிகள்
x

புகழூர் வாய்க்காலில் பராமரிப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கரூர்

கரூர் மாவட்டம், புகழூர் வாய்க்காலில் ஆண்டுதோறும் மே மாதம் வாய்க்கால் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம். பின்னர் ஒரு மாதத்திற்குள் பராமரிப்பு பணியை முடித்து விட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி வாய்க்கால் பராமரிப்பு பணிக்காக காரணாம்பாளையம் காவிரி ஆற்று தடுப்பணையில் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் தண்ணீர் நிறுத்தப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகியும் வாய்க்காலின் பராமரிப்பு பணி மந்தமாக நடைபெறுகிறது. இதனால் பயிர்கள் வாடி கருகி வருதால் தண்ணீர் திறந்து விடப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வாய்க்காலில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் மதகுகள் சீரமைக்கும் பணிகளை திடீர் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது 40 மதகுகள் சீரமைக்க வேண்டிய இடத்தில் 3 மதகுகள் மட்டுமே சீரமைப்பு செய்யப்பட்டு இருந்தது. எனவே வாய்க்கால் மதகுகள் சீரமைக்கும் பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என சம்பந்தபட்டதுறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், புகழூர் தாசில்தார் முருகன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாய சங்கத்தினர், விவசாயிகள் உடனிருந்தனர்.


Next Story