கறம்பக்குடியில் முக்கிய சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றம்


கறம்பக்குடியில் முக்கிய சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றம்
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கறம்பக்குடியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய சாலைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

புதுக்கோட்டை

போக்குவரத்து நெரிசல்

கறம்பக்குடி வளர்ந்து வருகிற வர்த்தக நகரமாகும். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பொருட்களை வாங்க, விற்க என தினமும் கறம்பக்குடி வந்து செல்கின்றனர். மேலும் திருமண மண்டபங்கள், டாஸ்மாக் கடைகள் போன்றவை ஒரே பகுதியில் அமைந்து உள்ளதால் அம்புக்கோவில் முக்கம், சீனிக்கடை முக்கம், திருவோணம் சாலை போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் என பலரும் பாதிக்கப்பட்டனர்.

எனவே கறம்பக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

ஒருவழிப்பாதையாக மாற்றம்

இதையடுத்து, கறம்பக்குடியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் முருகேசன், நிர்வாக அதிகாரி கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் வர்த்தக, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கறம்பக்குடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு வழிப்பாதை திட்டத்தை அமல்படுத்துவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என தீர்மானிக்கப்பட்டது. இதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் கறம்பக்குடி பங்களாகுளம் வீதி, உள் கடைவீதி, வாணியதெரு, நெல் மிஷின் ரோடு, அம்புக்கோவில் முக்கம் ஆகிய சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகின்றன. இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் கோரிக்கை குறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.


Next Story