நெட்டி மாலை வியாபாரத்தை நம்பி பிழைக்கும் மேலவல்லம் கிராம மக்கள்


தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வருடத்திற்கு 3 மாதம் மட்டும் நெட்டி மாலை வியாபாரத்தை நம்பி மேலவல்லம் கிராம மக்கள் பிழைத்து வருகின்றனர். எனவே மானியத்துடன் கடன் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

வருடத்திற்கு 3 மாதம் மட்டும் நெட்டி மாலை வியாபாரத்தை நம்பி மேலவல்லம் கிராம மக்கள் பிழைத்து வருகின்றனர். எனவே மானியத்துடன் கடன் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெட்டி மாலை வியாபாரம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் 80 குடும்பங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் விவசாய கூலி தொழிலாளர்கள். ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த இவர்கள் ஒரு வருடத்தில் 3 மாதங்கள் மட்டும் நெட்டி மாலை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

நெட்டி மாலைகள்

நெட்டி மாலை செய்வதற்கான செடிகள் பெரும்பாலும் கடலூர், புதுச்சேரி, கும்மிடிப்பூண்டி, ஆந்திரா பகுதிகளில் உள்ள நீர்நிலைகளி்ல் கிடைக்கின்றன. மேலவல்லம் கிராமத்தில் இருந்து 40 அல்லது 50 பேர் குழுவாக இந்த ஊர்களுக்கு சென்று செடிகளை சேகரித்து லாரிகள் மூலம் தங்கள் ஊர்களுக்கு கொண்டு வருகின்றனர்.

சேகரிக்கப்பட்ட செடிகள் துண்டுகளாக நறுக்கி சாயம் சேர்த்து காய வைக்கப்படுகின்றன. பின்னர் கத்தாழை நார்கள் கொண்டு மாலைகளாக கோர்க்கப்பட்டு பந்து, ரோஜாப்பூ ,அல்லிமாலை, ஒத்தகுச்சி மாலை மற்றும் இரட்டைச்சர மாலைகள் என விற்பனை செய்யப்படுகின்றன

இதுகுறித்து மேலவல்லம் கிராமத்தில் நெட்டி மாலை செய்யும் பணியில் ஈடுபடுபட்டு வரும் ராமகிருஷ்ணன் (வயது 48) என்பவர் கூறுகையில்,

பாரம்பரிய தொழில்

பல ஆண்டு காலமாக எங்கள் மூதாதையர்களின் நினைவால் அதிக லாப நோக்கமின்றி பாரம்பரியமாக எங்கள் கிராம மக்கள் இந்த தொழிலை செய்துவருகிறோம். தயார் செய்யப்பட்ட நெட்டி மாலைகளை சைக்கிள் மூலம் பல்வேறு ஊர்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நெட்டி மாலைகளை வருடந்தோறும் பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களுக்கு முன்பு சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கும்பகோணம், கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.

மானியத்துடன் கடன்

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த மாலைகளை மக்கள் மாட்டு பொங்கல் அன்று பெரிதும் விரும்பி வாங்கி கால்நடைகளுக்கு அணிவித்து மகிழ்கின்றனர்.

வருடத்திற்கு 3 மாதம் மட்டுமே செய்யும் இந்த தொழிலை நம்பி, வட்டிக்கு பணம் வாங்கி பிழைப்பு நடத்தி வருகிறோம். இதற்காக எந்த ஒரு நிதி உதவியும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை.

எனவே அரசு இந்த தொழிலில் ஈடுபடும் மேலவல்லம் கிராம மக்களுக்கு மானியத்துடன் வங்கி கடன் வழங்கி உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story