குறைந்தபட்சம் 10 எழுத்துக்கள் பயன்படுத்தி கடினமான முறையில் உருவாக்க வேண்டும்
கடவு சொற்களை எழுத்துக்கள், எண்கள், சிறப்பு எழுத்துக்கள் என குறைந்தபட்சம் 10 எழுத்துக்கள் பயன்படுத்தி கடினமான முறையில் உருவாக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
மோசடி கும்பல்
மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடும் கும்பல் நாளுக்கு நாள் புதிது, புதிதாக பல்வேறு வழிமுறைகளை கண்டுபிடித்து வருகின்றனர். இதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
இதில் முக்கியமாக சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் சைபர் கிரைம் ஒன்றாகும். சமூக வலைதளங்களில் போலியான வலைத்தள பக்கங்கள் மூலமாகவோ, ஓ.டி.பி. மூலமாகவோ அல்லது இணைய வழியில் வேறு வகையிலோ பணம் திருட்டு உள்ளிட்ட சைபர் கிரைம் குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன.
செல்போன் எண்ணிற்கு கவர்ச்சிகரமான சலுகைகள் உள்ளது போல் வரும் தேவையற்ற இணையதள லிங்க்கை அனுப்பி அதன் மூலம் பணம் பறிக்கும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பகிர கூடாது
அதனால் தேவையற்ற இணையதள லிங்க்கை தொட்டு திறந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் வங்கி கணக்கு எண், கிரடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு ரகசிய எண், இ- மெயில், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் கடவுச் சொல் (பாஸ்வேர்டு எண்) ஆகியவற்றை யாரிடமும் பகிர கூடாது.
இ-மெயில், பேஸ்புக், வங்கி கணக்குகள் போன்றவற்றின் வெவ்வேறு கணக்குகளுக்கு வெவ்வேறு கடவுச் சொற்களை பயன்படுத்த வேண்டும். அவற்றை யாரிடமும் பகிர கூடாது. அவற்றை எழுதி வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.
கடினமாக முறையில்
கடவுச்சொற்களை எழுத்துக்கள், எண்கள், சிறப்பு எழுத்துக்கள் என மொத்தம் குறைந்தபட்சம் 10 எழுத்துக்கள் ஆகியவற்றை பயன்படுத்தி கடினமான முறையில் உருவாக்க வேண்டும். இவற்றை அடிக்கடி மாற்றம் செய்ய வேண்டும்.
இணையதள பண மோசடி புகார்களை தெரிவிக்க 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். சைபர் கிரைம் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.